திங்கள், 23 மே, 2016

முத்தைத் தரு பத்தித் திருநகை

சொற்சித்திரம்

குருவருளின் மகிமை சொல்லில் அடங்காதது. குருவானவர் மௌனத்தினால் மானஸ தீட்சையும், கண்களால் நயன தீட்சையும், திருவடியால் ஸ்பரிச தீட்சையும் தருகிறார் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். மானஸ தீட்சையின் போது  குருவாகவும், நயன தீட்சையின் போது தேசிகனாகவும், திருவடி தீட்சையின் போது ஆசார்யனாவாகும் விளங்குகிறார் என்றும் கூறுவது உண்டு. முத்தைப் போன்ற இந்த திருப்புகழில் சரவணபவன் அருணகிரிக்கு எல்லாமாகவும் இருக்கிறார். ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்யப் போகிறவர்.
இது ஒரு உபதேசத் திருப்புகழ் ஆதலால், சிவபெருமான் தனயனிடம் உபதேசம் பெற்ற நிகழ்வையே முதன் முதலாக பாடுகிறார். ‘உ’ பிரவண மந்திரத்தின் ஒரு எழுத்தின் காக்கும் எழுத்தாகும். ‘ம’ என்ற மெய்யெழுத்துடன் ‘உ’ என்ற பிரவண மந்திரத்தின் ஒரு பகுதியை இணத்து, உலகை யெல்லாம் காக்கும் கடவுள் (பெருமாள்) என்று குறிப்பால் உணர்த்துகிறார். மேலும் ‘தாயின் சிறந்ததொரு ‘கோயிலுமில்லை என்ற செம்மொழிக்கேற்ப முத்தமை என்ற தன் தாயின் பெயரையும் வைத்து ஆரம்பிக்கிறார். காக்கும் கடவுள் ஆனதால், கிரியா சக்தியின் மகத்துவம் விளங்க வேண்டும். ஆகையால் கிரியா சக்தியான தெய்வயானை அம்மையின் சிறப்புடன் முன் மொழிகிறார். என்றும் சொல்லலாம்.
முத்தைப் போன்று ஒளிகின்ற அளவான பல்வரிசை தெரிய இள நகை புரியும் தெய்வயானை அம்மையின் தலைவனே, சக்தி வேலாயுதம் தாங்கிய சரவணபவனே, மோட்சமாகிய வீட்டை அடைய மூலமாகி விளங்கும் குருபரனே என்று அழைக்கப்படுகிறார் பாட்டின் அடி எடுத்துக் கொடுத்தவர்.
அழைப்பவர் வேறு யாருமல்ல. சூரியன், சந்திரன், அக்கினியை மூன்று கண்களாகக் கொண்ட முக்கட் பரமன்தான்.. பரமசிவனுக்கு சரவணபவன் சுருதியின் முற்பட்டதும் வேதங்கட்கும் முன்பானதாக இருக்கும் ஒன்றை உபதேசிக்கிறார். மந்திர உபதேசம் என்பது குருவுக்கும் சாதகனுக்கும் இடையே இரகசியமாக இருப்பதாகும். அதனால் பிரவணத்தைச் சுருதியின் முற்பட்டது என்கிறார் (மற்றவர்களால் கேட்க முடியாதது என்றும் அர்த்தம் கொள்ளலாம்) அப்பேற்பட்ட ஒரு கடவுளை புகழாதவர்களும் உண்டோ?. பிரமனும், விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கூட அடி பணிகின்றனர். 
அடுத்து வரும் சில அடிகளில் சூர ஸம்ஹாரத்தை லயமிக்க சந்தத்துடன் விவரிக்கிறார். சூரன் என்ற தத்துவம் இங்கே ஒர் உருவகம் மட்டுமே. கந்த புராணத்தில் மட்டுமில்லாது, பதினெண் புராணங்களிலும் பொதுவானதொரு அம்சம் தெய்வீக சக்தி அசுர சக்தியை வெல்வதுதான். அசுர சக்தி என்பது மனிதனை அவனிருக்கும் நிலையை விட கீழே கொண்டு செல்கிறது. அதை அழித்தால் மனிதன் தெய்வத் தன்மை அடைகிறான். இங்கு சூரன் என்ற அரக்கன் “நான்-எனது” என்ற மலங்களுக்குத் துணை செல்பவன். அவனைப் போன்ற அவுணகர்கள் நட்பு அற்றவர்கள். அன்பு என்றால் என்னது என்பதே தெரியாதவர்கள். க்ரௌஞ்ச மலையைப் போல் இறுகியவர்கள். உக்ர காளிக்கும், பேய்களுக்கும், கழுகளுக்கும் உணவாகப் போகிறவர்கள். அவர்களை அழித்தால்தான் மும்மலங்கள்  நீங்கிய மனத்தில் இறைவனின் உபதேசம் என்கின்ற மந்திரம் மனத்தை தூய்மையாக்கி தெய்வம் குடி கொள்ள ஏற்ற இடமாக மாறும்.
அவுணர்களை போர் செய்து அழித்த முருகன் மாமனாகிய ஸ்ரீமன் நாராயாணனுக்கு மிகப்பிரியமானவன். ( மெச்சத்தகு பொருள்). திருமாலின் மூன்று அவதாரங்களை மூன்றே வரிகளில் மிக அழகாகக் கூறுகிறார்.
பத்துத்தலை தத்தக்கணை தொடு – இது ஒரு வில்லால் இராவணனை வதைத்த இராமவதாரம்: வட இந்தியர்களால் “மரியாதா புருஷோத்தம்” என்று மிக்க மரியாதையுடன் அழைக்கப் படும் இராமனை “ஒரு இல், ஒரு வில் ஒரு சொல்” உடையவன் என்று கம்பன் விளித்தார்.  அருணகிரிநாதரும் ‘கணைகள்’ என்றல்லாமல்  கணை என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒரே கணையால் பத்துத் தலைகளையும் கொய்தவன் என்று பொருள். 
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு - ஒப்பற்ற மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்த கூர்மாவதாரம்.
பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக பத்தற்கிரதத்தைக் கடவிய - பகல் பொழுதை (சூரியனை) மறைத்து, இரவு ஆகச் செய்து, தன் பக்தனாகிய அருச்சுனனைக் காப்பாற்றி அவனுக்கு தேரையும் ஓட்டிய கிருஷ்ணாவதாரம். அந்த அவதாரம் செய்தவர்  பச்சைபுயல் மரகத வண்ணனான கண்ணன். இது ஒரு உபதேசத் திருப்புகழ் என்பதற்கேற்ப கண்ணனின் அவதாரத்தைப் பாடுகையில், அருணகிரிநாதர் நமக்கு உணர்த்தும் (மிக ஆழமாகப் பொதிந்துள்ள) பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷோத்தமன் பத்தற்கு (அர்ச்சுனனுக்கு) இரதத்தைக் கடவிய போதுதான் பகவத் கீதை என்னும் பரம உபதேசத்தையும் அருளினான். வேதத்தை மறை என்றும் கூறுவார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு உபநிடத்தின் சாரமான கீதையை எடுத்துக் கூறினான் என்பதை இந்த வரியில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ள அருணகிரிநாதரின் கவித்துவத்தை என்னவென்று சொல்வது.!
திருமாலின் திருமருகனாம் முருகன் அன்புடன் ‘என் பக்கம் (பட்சத்துடன்) என்னை காத்து அருளும் நாளும் உளதோ?’ என இவ்வழகிய திருப்புகழை முடிக்கிறார்.
இவ்வழகிய திருப்புகழை நாம் வேறொரு கோணத்திலும் காணலாம். நினைந்து நினைந்து அகமகிழ வேண்டிய கருத்தாகும்.
கோயில்களில் எல்லாம், பிரதான கடவுளை விளிக்கும் பொழுது, தேவியின் பெயரை முதலில் சொல்லி அவளுடனுறை என்று தமிழிலோ அல்லது இன்னார் ஸமேத என்று ஸம்ஸ்க்ருதத்திலோ சொல்லக் கேட்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம் என்ன, அதுதான் முறை, வழக்கமும் கூட. அருணகிரியார் இவ்வழக்கத்தை முறை பிறழாமல், “முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறையே” என்று, தெய்வயானை முன் வைத்து முருகனை அழைக்கிறார். அவள்தான் அவனுடைய சக்தி. அதாவது க்ரியா சக்தி.
மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து ஸுந்தரவல்லியுடன் தோன்றிய அமிர்தவல்லி பெயருக்கேற்ப, அமுதமுண்ட தேவர்கள் உறையும் இந்த்ரலோகத்தில் இந்திரனாலும் அவனுடைய யானையாகிய ஐராவதத்தாலும் முறையாக வளர்க்கப் பட்டவள். அவள் தேவ கன்னிகை. ஆக, சூரப்த்மனால் தேவர்கள் பட்ட கொடுமையை பக்கத்திலிருந்து பார்த்தவள். அதே சமயம் அத்தை மகன் ரத்தினத்தின் (வேறு யார்? நம் முருகன் தான்) மீது ஆராத காதல் கொண்டாள். அரசிளங்குமரி அல்லவா? அவளுக்கென்று ஒரு கவுரவம் அல்லது PROTOCAL உண்டே! ஆகவே சட்டென்று தன் காதலை வெளியிட முடியவில்லை. அத்தையின் சிபாரிசால், வேலாயுத்தில் தன் சக்தியெல்லாம் திரட்டி அவனிடம் கொடுக்கச் செய்தாள். சூரனைக் கொல்வதற்கு திரையின் பின்னால் இருந்து கொண்டு அவனுக்கு கிரியா ஊக்கி ஆனாள். அவுணரை ஸம்ஹரித்த பின்னர் முறையாக, இந்திரனால் தாரை வாக்கப்பட்டு வேத மந்த்ர கோஷங்களுடன் ஊரறிய உலகறிய ஸுப்ரஹ்மண்யனுக்கு தர்மபத்தினியானாள். எங்கேயும் எதிலும் அவள் பேசி நாம் கண்டதில்லை, கேட்டதில்லை. வட்டார வழக்கில் சொல்வ தென்றால், “இந்த சிறுக்கி அமுக்கமாக இருந்து, என்ன காரியம் பண்ணியது பாத்தீயகளா? அந்த ஆண்டிப் பயலையே வளைச்சு போட்டுகிடுச்சே” என்றுதான் கூற வேண்டும்.
ஹாஸ்யத்தை விட்டு மீண்டும் அருணகிரிக்கு வருவோம். முத்தைப் போன்ற பல்வரிசையில் நகையொளியை பரப்பும், அத்தி(யானை)யால்  வளர்க்கப்பட்ட தேவயானையின் தலைவனே என்று முதலடியில் முருகனை அழைக்கிறார். யானை என்று சொல்லும்போதே அண்ணனான யானைமுகனையும்  நாம் நினைவு கொள்கிறோம். எனினும் நம் ஒருமுனைப்பாடெல்லாம் தேவயானையிலேயே இருக்கிறது.
அவள் பல்வரிசை வெண்மையாக இருப்பது என்பது சத்வ குணத்தைக் குறிக்கிறது. முக்தியை விரும்பும் சாதகன் ஒருவன் மற்ற குணங்களை ஒழித்து சத்வகுணத்தில் நிலை கொள்ள வேண்டும்.
அவளுடை புன்முறுவல் பளீரென ஒளிவிடுகிறது. ஒளி உள்ள இடத்தில் இருளாகிய அஞ்ஞானத்திற்கு என்ன வேலை? ஆக, அவள் நம்மை சத்வகுணமுள்ளவர்களாக்கி அஞ்ஞானத்தை அகற்றுகிறாள் என்று கூறலாமா?
ஏனெனில், “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்பதற்கு முக்தியைத் தருவதான பக்தி நிறைந்த திருநகை என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? அப்படிப்பட்ட பக்தியை, அன்பை, காதலை நமக்கும் அருளும் திருநகை என்று கூட விரித்துக் கொள்ளலாம். இவ்வாறு  நான் கூறவில்லை, ரா. கணபதி கூறுகிறார். 


      முத்தைத் தரு, ரா. கணபதி, வாக்குக்கோர் அருணகிரி, ஸுந்தரவல்லி, அமிர்தவல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக