புதன், 18 மே, 2016

முருகனுக்கு உகந்த மலர்கள்



மலர் அழகானது; மலர் மிருதுவானது; மலர் மென்மையானது; மலர் மேன்மை மிக்கது; மலர் அமிர்தமயமானது; மலர் குளிர்ச்சியானது: மலர் தன்னையே தரும் வள்ளல்; மலர் எதையும் எதிர்பார்க்காதது; அதன் மணம் அதற்குச் சொந்தம் இல்லை; எனினும் யாரிடமும் கோள் சொல்வதில்லை; மலருக்கு ஒர் உருவம் உண்டு, ஆனாலும் அதன் மணம் அருவமான ஓர் இதத்தைத் தருவது; ஆதாரமாக (ஸத்தாக)இருக்கக் கூடிய தண்டிலிருந்து பிரிந்து சூரியசக்தியை உணவாக்கிக் கொடுக்கும் (சித்சக்தியான) இலைகளின் ஊடே மலரும் மலர்கள் ஆனந்தத்தின் இருப்பிடம்.
முருகன் அழகானவன்; முருகன் மிருதுவானவன்; முருகன் அடியவருக்கு மென்மையானவன்; முருகன் அமிர்தமயமானவன்; முருகன் சீதளமானவன்; முருகன் தன்னையே தரும் வள்ளல்; யாரிடமும் கோபம் கொள்ளத் தெரியாதவன். மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத அன்பே உருவானவன்; முருகனுக்கும்  உருவம் உண்டு எனினும் அவன் தண்ணருளால் அருவமாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு இதத்தை அளிப்பவன்; ஸத்தான ஸ்தாணுவாக இருக்கக் கூடிய பரமசிவனுக்கும் அபர்ணாவாகச் சுற்றிப் படர்ந்திருக்கும் பார்வதிக்கும் இடையே உதித்த விசாகன் அவன். ஸத்தான பரப்ரம்மத்தில் சிச்சக்தியின் ஸ்பந்தத்தினால் ஏற்பட்ட ஆனந்தமே அவன். ஆகவே முருகன் ஆனந்தத்தின் இருப்பிடமானவன். ஆக முருகனும் மலரும் ஒன்றே என்று கூறலாமா? அதிலென்ன சந்தேகம்?
கடவுள், தான் எல்லா இடத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று தான் ஒவ்வொருவருக்கும் ஒரு தாயைப் படைத்தான் என்று ஓர் ஆங்கிலக் கவிஞன் கூறினான். இயற்கை அன்னையோ, அதே கடவுளை, என் படைப்பினில் கணக்கில் அடங்காத வண்ண வண்ண மலர்களில் கண்டு களித்து ஆனந்தமடையுங்கள் என்று கூறாமல் கூறுகிறாள். உண்மை தான். ஒரு கணத்திற்கேனும் மலர் இல்லாத ஆண்டவனின் சன்னிதானத்தையோ, தேரில் பவனி வரும் ஓர் உற்சவரையோ, கெட்டிமேளம் கொட்டும் ஒரு கல்யாணக் கூட்டத்தையோ, ஏன் பகுத்தறிவாளர்களின் விழாவையோ கூட நம்மால் சிந்திக்க முடியுமா?
தாங்கள் எங்கிருந்தாலும் அந்த இடத்திற்கு ஒரு தெய்வீகத்தன்மையையும் சுகந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும்  தரும் மலர்கள், தாங்களே ஒரு மனத்தைக் கவரும் காட்சிப் பொருளாகி மோனத்தில் ஆழ்ந்து விடுகின்றன. அதுவும் ஆண்டவனின் திருவுருவத்தை அழகு செய்யும் மலர்கள் மோனத் தவத்திலேயே மூழ்கி விடுகின்றன என்றே கூறலாம்.
எனவே இறை வழிபாட்டினில் மலர்களின் பங்கையோ சிறப்பையோ எடுத்துக் கூற பட்டிமன்றம் ஒன்றும் தேவையே இல்லை. இறைவனுக்கு மலர்களை ஏன் சமர்ப்பிக்கின்றோம்? நமக்கு  தகைமை உள்ளதோ இல்லயோ, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் வள்ளலுக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக ஏதேனும் கொடுக்க ஆசைப் படுகின்றோம். அவனுக்கென்று கொடுக்கக் கூடிய பொருள் அவனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ‘பத்ரம், புஷ்பம், பலம், தோயம், யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்றான் கீதாசாரியன்.
பக்தியுடன் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான் என்றாலும், பூவினால் அர்ச்சித்தால், அவன் மனம் மேலும் மகிழ்ச்சி அடையும். ஏனெனில், மலரும் ஆண்டவனும் ஒன்றே. அதாவது, அவனுடைய சிறப்புத் தன்மையும், பூவின் சிறப்புத்தன்மையும் ஒன்றே. எனவேதான் இக்கட்டுரையை முருகனும் மலரும் ஒன்றே என்ற கூற்றுடன் தொடங்கினோம். அவனுக்கு கொடுக்க வேண்டிய பொருள் அவனை விட வேறான தகுதி உள்ளதாய் இருக்கலாகாதல்லவா?
அவன் பாதங்கள் மலர்களைப் போன்றவை. அவன் அருட் கரங்களும் மலர்களைப் போன்றவையே. அவனுடைய முகமும் மலர் போன்றதே. ஆலிலையில் துயிலும் அந்தக் கார்மேனியனாம் கண்ணனை “கராரவிந்தேன பதாரவிந்தம், முகாரவிந்தே வினிவேஶயந்தம்”: அதாவது கைத் தாமரையினால் பாதத் தாமரையை, வாய் என்ற தாமரையில் வைத்து அழகாக மோன நித்திரையில் உள்ள முகுந்தனே என்று முகுந்தாஷ்டகத்தில் பாடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பார்க்கின்ற மலர்களில் எல்லாம் ஆண்டவனின் திருவுருவத்தைக் காண்பதால் அவைகளைப் பறிக்க மனமின்றி பின் வாங்கி விடுகிறார் தாயுமானவர். “.....பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க மனமும் நண்ணேன்...” என்று பாடுகிறார். இருந்த போதிலும் சில நாட்களுக்குள் வாடப் போகும் மலர்களை எடுத்து இறைவனுக்குக் சமர்ப்பிப்பதில் தவறேதும் இல்லையாததால் பூவினால் வழிபாடு செய்வது என்பது தொன்று தொட்டு வரும் வழக்கமாகி இருக்கிறது. அதனாலேயே, மலர்களைக் கொய்வதில் கூட சில வழிமுறைகளை வகுத்திருக்கின்றனர் நம் முன்னோர்.
ஒரு பூவின் பருவ வேறுபாடுகளுக்கேற்ப அவற்றை, அரும்பு, மொட்டு, போது, மலர், அலர்  என ஐந்து வகையாக பிரிக்கப் படுகின்றன. பூவின் கனிந்த யௌவனப் பருவமே மலராகும். வண்டுகள் வந்து தேனையும் பூந்தாதினையும் எடுக்க மலர்களை வட்டமிடும் பருவம் இது. இந்த நிலையில் தான் அவைகள் பூசனை செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. முருகனின் நீப மாலையில் வண்டுகள் வரிசையில் சீராக வந்து ராகம் பாடுவது போலுள்ளது என்கிறார் அருணகிரிநாதர். “..... நீளும் வரியளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்.....”
(சீரான கோல கால)
புஷ்பங்களுக்கும் மூன்று வகையான குணங்கள் இருக்கின்றன என்று ஆன்றோர் கூறுவர். வெள்ளை நிறத்தவை சத்வ குணத்தைக் கொண்டவை. இராஜஸ குணம் கொண்ட மலர்கள் சிவப்பு நிறமானவை. தாமஸ குணம் உடையவை நீல நிறமாக இருக்கும். மஞ்சள் நிறமான மலர்கள் எல்லா குணங்களையும் பெற்றிருக்கும். இதைத் தவிர பிரத்தியேகமாக சில மலர்களுக்கு சில விசேஷமான குணங்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றை மலரின் ஆன்மீக மகத்துவம் என்றும் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, தாமரை மலர் திருஉருவ வழிபாட்டிலும் சரி, ஆன்மீகத்திலும் தனியிடம் பெற்றிருக்கிறது. வெண்தாமரை ஸத்துவ குணத்தின் குறியீடாகும். கமலமே உலகில் உதித்த முதல் மலர் என்று கூறுபவரும் உண்டு. எந்த மென்மையன பொருளுக்கும் தாமரை என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது வழக்கம். இதயக்கமலம், பாதத்தாமரை, முக கமலம் என்றெல்லாம் ஏற்றம் கொடுக்கிறோம். தாமரையை ஏன் இவ்வளவு சிறப்பித்துக் கூறுகிறோம் என்றால் அதனுடைய பிறப்பிடம் அப்படி. பொதுவாக கமல மலர்கள் சேற்றில் தான் உதிக்கின்றன. ஆனாலும் தண்ணீர் மட்டத்துக்கு மேலெழுந்து நிற்கின்றன. அதாவது இந்த ஜீவாத்மா விவகாரமான உலகத்தில் பிறந்தாலும், அவைகளிலிருந்து மேலெழும்பி ஆண்டவனை நாட வேண்டும் என்பதே. தாமரை இலைத் தண்ணிரைப் போன்று இவ்வுலகத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதே. தாமரை எப்பொழுதும் சூரியனைப் பார்த்துக் கொண்டே இருப்பது போன்று, நம் அகத்தின் முகமும் ஞான சூரியனான கந்தனை நோக்கியே இருக்க வேண்டும் என்பதே. இவைகளெல்லாம் இந்த மலரிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஆன்மிக போதனை களாகும். தாமரை மலருக்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. ஆனால் இவற்றை விவரிக்க இக்கட்டுரை போதாது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த தெய்வீக மலர் முருகனுக்கு உகந்த மலர் என்பதில் என்ன சங்கை இருக்க முடியும்? முருகனின் ஆறுமுகங்களையும் ‘கமலமுகங்கள்’ என்றும், ‘கருணைபொழி கமலமுகம் ஆறும்’ என்றும் அருணகிரிநாதர் வர்ணிக்கின்றார். அவன் பாதங்களும் தாமரைகள் தான். “சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேதா” என்று பாதங்களின் புகழ் பாடுகின்றார். ‘குரவு, செக்சை, வெண்முளரி புத்தலர்குவளை முற்று அணி மார்பா”, ‘கஞ்சமலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே” என்ற அருணகிரிநாதரின் வாக்கிலிருந்து தாமரை முருகனுக்கு உகந்த மலர் என அறியலாம்.
அடுத்து, கொன்றை மலரைக் காண்போமா?
கொன்றை மலர், சிவபெருமானுக்கே உரிய மலர் என்றாலும் அவன் அருமை மைந்தனான ஆறுமுகனுக்கும் உகந்ததொன்றாகும். கொன்றை மலரை பிரணவ மலர் என்று கூறுவதும் உண்டு. ஐந்து இதழ்களி உடையதால் புனிதமான ஐந்தெழுத்தையும் அது குறிக்கும். ஐந்தெழுத்தோடு பிரணவத்தைச் சேர்த்தால், ஆறெழுத்து மந்திரம் உண்டாகும் அது கந்த வேளுக்கு உரியதாகும். கொன்றை மலரில் மத்தியில் கிரந்தத்தில் பிரணவம் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி கோசரம் (பூந்தாது) இருக்கிறது. ஆகையால் கொன்றை முருகனுக்கு உகந்த மலராகும். ‘சஞ்சரியுகந்து’ என்ற திருப்புகழில், “கொன்றை தும்பை மகிழ விஞ்சி கந்தி கமழ்கின்ற பெருமாளே” என்று கந்தனை விளிக்கின்றார் அருணகிரிநாதர்.
குரா மரமும் அதன் மலரும் முருகனுடன் விசேடமான தொடர்புடையவை. குராமலரும் தெய்வீகத்தன்மை உடையதால், அதனைத் ‘திருக்குரா’ என்றே கூறுகிறார்கள். தாமரையைப் போன்றே திருக்குராவும் எல்லா தெய்வங்களுக்கும் விருப்பமான மலர் என்றாலும், ஏனோ தாமரையைப் போன்று தாராளமாகக்  கிடைப்பது இல்லை. பெரும்பாலோர் இதை அறிந்ததுமில்லை. முருகப்பெருமான், குராமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு, குரர மலரை தன் மார்பிலும், தோளிலும் பாதத்திலும் அணிந்து கொண்டு இருக்கிறான்.  குராமலரில் முருகனின் பாதங்கள் மறைந்திருக்கிறது என்பது, ‘குராக்கொளிரு கழல் தாராய்’ என்ற அருணகிரிநாதர் அடிகளிலிருந்து தெரிகிறது.  திருவிடைக்கழியில், குராவடிக் குமரனை, பலவாறாகவும்பாடி இருக்கிறார். அவர் இயற்றியுள்ள நூல்களாகிய, திருப்புகழிலும், அலங்காரத்திலும், அநுபூதியிலும் வகுப்புகளிலும் குராவைப் பற்றின குறிப்புகள் வருகின்றன.
“திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே”, “குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும்”, “அருணை நகருறை சரவண குரவணி புயவேளே”, “குரவும் அறுகும் குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ் சடில. .” என்பன அருணகிரியாரின் வாக்குகள். ‘குரவணி பாதம் பணிவோர்க்கு இனிமை கொடுக்கும் பிரான்’ சிதம்பர சுவாமிகள் போற்றியிருக்கிறார். “கோடலும் மராத்தொடு குரவுந் செச்சையுஞ் சூடிய குமர” என்கிறார் கச்சியப்பர்.  சாதுராம் ஸ்வாமிகளோ “கோகலி குராகுவளை கூதாளம தாலமலர் கோகனம் வாகையணி மணிமார்பா” என்றும், “ குரவொடு நீபமலர் அறுகுதமை அணிதருவது” என்றும் பாடியிருக்கிறார். சிதம்பரம் முனிவர் “சரவணபவணே குரவணிதரு சண்முகனே தாலேலோ”, என்று பாடி ஆனந்திகிறார்.
 அடுத்தும் முருகனுக்குப் பிடித்த மலர் கடம்பு அல்லது கடப்ப மலர் ஆகும். குரா மலருக்கு நிகராக, முருகனை கடப்ப மலர் மாலையால் அழகு பெற்று விளங்குவதை அருணகிரியார் பாடிப் பாடி மகிழ்கிறார். “கடிமாமலர்க்குள் இன்பமுளவேரி கக்கு நண்பு தருமா கடப்பமைந்த தொடை மாலை கன மேரு ஒத்திரும் பன்னிரு மா புயத்தணிந்த கருணாகரா”. கடப்ப மாலையின் பெருமையை வானளாவப் புகழ்கிறார். மிகச் சிறந்த மணங்கமழும் பெரிய கடப்ப மலர்களை மாலைகளாகத் தொடுத்த பெரிய மாலைகலைத் தன் பன்னிரு புயங்களிலும் அணிந்து கொண்டிருக்கும் முருகனை, அந்த மலர்களால் அர்ச்சித்தால் அவன் நட்பு நிரந்தரமாகக் கிடைக்கும் என்கிறார் சந்தப் புலவர். கடப்ப மலர் போகத்தைக் குறிக்குமாதலால் பூசனையில் இம்மலர்கள் இருந்தால், அவன் சகல செல்வ யோகமும் தருவானன்றோ! நீப மலரும் கடம்பையே குறிக்கும். ‘இந்துளந் தொடைமகுட’, ‘கடம்புடன் சந்த மகுடங்களும்’ என முருகன் கடப்ப மலர் அணிந்திருப்பதை திருப்புகழ் தெரிவிக்கிறது.
முருகன் அடியார்க்கு எளியவன் என்றாலும் இடர் கொடுக்கும் அசுரரை வெல்லும் பொழுது அவன் தேவர்களின் சேனைக்கு அதிபதி ஆகிறான். அப்பொழுது அவன் வீரத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறான். அவ்வமயம் அவன் விரும்பி அணிந்து கொள்வது வெட்சி மாலையாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் வெட்சிப் பூ வீரத்தின் அறிகுறி என்பர். செங்காந்தள் மலரும் தீரத்தின் நிலைப்பாடே. ரத்தம் போன்ற சிவப்பு நிறம் கொண்டது, மேலும் கோழிக் கொண்டை போன்றும் இருக்கும். ‘செச்சை பிச்சி மாலை மார்ப’, என்பார் சந்தப்புலவர்.
போருக்குப் பின் வருவது அமைதி அல்லவா? சச்சரவின்மையைக் கொடுக்கும் வெண்காந்தள் மலரும் அவனுக்குப் பிடித்த மலரே. இதை கார்த்திகைப் பூ என்றும் கோடற்பூ என்றும் கூறுவார்கள். (கோடற்பூ முட்டடாதிட்ட- திருப்புகழ்) பெயருக்கேற்ப “கரும்பு மூசாச் சுடர் பூங்காந்தள், பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்” என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டிருக்கிறது.
நம்மனத்தை அள்ளும் குவளையும் அவன் மனதிற்குப் பிடித்ததொன்றாகும்.
“...எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற அணைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்புவது ஒன்று உளதோ தான்”.
வணங்காமுடியாக இருக்கும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் பொறுமையுடன் என்னை மாற்றி உன் பக்தருள் என்னை ஒருவனாகச் செய்த உன் பொறுமையை எவ்வாறு புகழ்வது என்று கேட்கிறார், அருணகிரியார். அத்தகைய பொறுமை எனும் அணிகலனை அணிந்துள்ள முருகன் மகிழம்பு மாலையை புனைந்து கொண்டிருக்கிறான். மகிழம்பூ பொறுமையின் தனிச் சிறப்பைக் கொடுக்க வல்லது. அவன் விரும்பி அணிவதால், அவனிடமிருந்தே பொறுமையைக் கற்றுக் கொண்டிருக்கிறதோ?
வண்ண  வண்ண மாலைகளின் நடுவே ஒரு மாறுதலுக்கு கரும் பச்சை வண்ணத்தில் திருநீற்றுப் பச்சையை அணிந்திருக்கிறான் நம் மனதிற்குகந்த முருகன். பச்சை வண்ண இலை மாலை, கண்ணிற்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்ல; ஒருவித கட்டுப்பாடையும் தருகிறது. மனம் தறிகெட்டுப் போகாமல் திருநீற்றுப்பச்சை எண்ணங்களை ஒருமுகப் படுத்தி கண்ணியத்தையும் தருகிறது.
 கந்தன் தன் தந்தையைப் போலவே தும்பையை விரும்புகிறான். ஏன் தெரியுமா? அது சத்துவ குணம் நிறைந்தது, மனதைப் பால் போல் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முருகன் வாரி வழங்கும் வள்ளல்; காசித்தும்பை பூக்களால் அர்ச்சித்தால், அவைகளுடைய உதார குணம் போலவே, நமக்கும் அருளையும் பொருளையும் அளவில்லாமல் கொடுப்பான்.
செண்பகப் பூக்களும், மந்தாரை மலர்களும், உள்ளுணர்வின் தெய்வத்தன்மையை வெளிக் கொணரும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை களையும் தொடுத்தணியும் மார்பினன் மால் மருகனான முருகன். சத்துவ குணத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் முல்லையும் மல்லிகையும், சம்பங்கியும். அல்லியும், தெளிவான மனத்தைக் கொடுக்கும் மனோரஞ்சிதமும் சிறுசெண்பகமும் முருகனுக்கு உகந்த மலர்களே.
வள்ளி முருகனிடம் மையல் கொள்கிறாள். கந்தனும் வேடவனாகவும் வேங்கையாகவும் பின் கிழவனாகவும் வந்து அவளை அலைக் கழிக்கின்றான். அண்ணனின் துணையுடன் அவர்களுள் சமரசம் நிகழ்கிறது. எள்ளுப் பூ மிக அழகானது; அது சமரசத்தின் சின்னம். முருகன் வள்ளியின் மூக்கை எள்ளுப்பூ என்று வர்ணிக்கின்றான். ஆகையால் எள்ளுப்பூவும் முருகனுக்குப் பிடித்ததே. இதை அருணகிரியின் கந்தர் அந்தாதியில் காண்கின்றோம். “செம் திலகத்து அலர் வாள் நுதல் வேடிச்சி முக  பங்கசெம் திலகத்து அலர் துண்டம் என்னா நின்ற சேயே....” ‘வள்ளி நாயகியின் முகத்தைத் தாமரை என்றும், மூக்கை எள்ளுப் பூ என்றும் வியக்கும் குமாரக் கடவுளே’ என்கிறார் அருணகிரிநாதர்.
எத்தனை தான் ஏற்றம் இருப்பினும் மலர்கள் ஒருநாள் பொழுது இருந்து வாடுபவையே. அவன் பாதத் தாமரையோ என்றுமே வாடாத மலர். அந்த வாடாத மலரை நம் சென்னியில் சூடிக் கொள்ள வேண்டுமென்றால் நாமும் அவனுக்கு ஒரு வாடாத மலரைச் சாற்ற வேண்டும். அது தான் பக்தி எனும் மலர். தூலமான பொருளில் மலர்கள் இல்லாமலே கூட பக்தியால் அவனை அர்ச்சிக்க முடியும்.  பக்தியே இல்லாமல் டாம்பீகமாக பல மலர்களை அர்ச்சித்தாலும் ஒரு பயனும் இல்லை. (ஆராதனர் ஆடம்பரத்து - திருப்புகழ்). மன்மதன் சிவனை மலர் அம்புகளை ஏவினான். அவைகளை பரமசிவனின் பாதங்களில் அன்பு பூண்டு சமர்ப்பிக்கவில்லை. விளைவு? மன்மதன் எரிந்து சாம்பலானான். பின் எப்படி பக்தி எனும் மலரை சமர்ப்பிப்பது? அருணகிரியே அதற்கான விடையும் அளித்து இருக்கிறார்.
அருணகிரிநாதர் அணிவிப்பது மாத்ருகா புஷ்ப மாலை. அதை ஆசைகூர்ந்து அணிவிக்கிறார். மனோபத்மமான பூக்கள் தான் தொடுக்கப் பட்டு இருக்கின்றன. அவைகளை ‘அன்பு’ எனும் நாரினால் தொடுத்திருக்கிறார். அவை மிக அழகாகத் தொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? அவருடைய நாவு தான். ஞானப் பழமான கந்தன் நடக்கும் இடம் அது. அந்த மாலைக்கு வாசனை வேண்டுமே, ஞானம் எனும் நறுமணத்தைத் தடவினால் என்ன? ஞானமாலை ஆதலால் அது தானாகவே ஒளி வீசுகிறது. அந்த மாலையைச் சுற்றி குற்றமற்ற அவருடைய புத்தி எனும் வண்டு ரீங்காரமிடுகிறது. இவ்வாறு ஆயிரத்து நானூற்று நாப்பத்து ஐந்து சப்தமந்திரங்களைக் கொண்ட ஐம்பத்தொரு அக்ஷரங்களால் ஆன இந்த ‘மாத்ருகா புஷ்ப மாலை’யை உன் அழகிய திருப் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்’ இதை போன்றே பக்தியுடன் நம் மனதையும் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கச் சொல்கிறார் அருணகிரிநாதர்
ஆசைகூர் பத்தனேன் மனோபத்மமான பூ வைத்து நடுவே
அன்பான நூலிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான
வாசம் வீசிப்ரகாசியா நிற்பமாசிலோர் புத்தி அளிபாட

மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவேனோ


1 கருத்து: